சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தெற்கு ஆசியாவில் நடைபெற்று வந்த ஒரே ஏ.டி.பி. போட்டி இதுவாகும்.

1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடன் ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையில் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

டபிள்யு.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறும் தேதியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டபிள்யு.டி.ஏ. எனப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26ந்தேதி முதல் அக்டோபர் 2ந்தேதி வரை நடக்கிறது. இது டென்னிஸ் ஆர்வலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அனுமதி பெற்று தந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியை நடத்துவதற்கு முதல்கட்டமாக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.” என்றார்.