#HBDTHALA கடைசிவரை ஜெயிக்கலனா என்ன பண்ணுவ.... அப்போதும் விடாமல் முயற்சி செய்வேன்!!

தல அஜித்குமார் இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு வருடமும் அஜித்தின் பிறந்தநாளின் போது அதை திருவிழாவாக கொண்டாடுவார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த வருடம் உலகமே கொரோனா வைரஸால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.  இந்த நேரத்தில், தான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, என கடந்த ஆண்டே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அஜித். இருப்பினும் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? ஒரு வாரத்திற்கு முன்பே, இணையத்தில் தலயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

1993-இல் அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். எந்த ஒரு பின்னனியும் இல்லாமல் இன்று தமிழ்சினிமாவில் ஒரு சூப்பர்ஸ்டாராக தன்னுடைய கடின உழைப்பாலும் விட முயற்சியாலும்  விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கிறார். அவருடைய இந்தப் புகழுக்கு அவருடைய சிம்ப்ளிசிட்டி, அனைவருக்கும் உதவும் குணம் என்றுப் பல காரணம்.

இன்று அஜித்க்கு 50-வது பிறந்தநாள். நேற்று முதலே ரசிகர்கள் ட்விட்டரில் அஜித் பிறந்தநாளை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ரசிகர்ள் மட்டுமல்லாமல் சக நடிகர் நடிகைகளும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

இந்த சமயத்தில் தனது 40-வது பிறந்த நாளின் போது, அஜித் எடுத்த முக்கிய முடிவு ஒன்று நாம் நினைவு கூற வேண்டியது இருக்கிறது. அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டில், அஜித் தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.  பிறந்தநாளுக்கு 2 நாள் முன்பாக, அவரிடமிருந்து முக்கிய அறிக்கை ஒன்று வெளியானது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த அந்த அறிக்கையில், அதிர்ச்சியே காத்திருந்தது.

அந்த அறிக்கையில், ”நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவர்களை, கேடயமாக பயன்படுத்தியதுமில்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால், அதற்கு ஆதரவு தரவும், இல்லாவிட்டால் அதனை விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமையுண்டு. சமுதாய பணிகளில் ஈடுபடுவது கூட, யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும், என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். 

நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல்ல உள்ளமும் எண்ணமும் மட்டுமே போதும், என்பது என் கருத்து. அதனால் எனது 40-வது பிறந்த நாளில் என் கருத்தை முடிவாக அறிவிக்கிறேன். அதோடு என் தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த, அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். எனது இந்த முடிவுக்கு ஆதரவளிக்கும் உண்மையான ரசிகர்களின், கருத்து மட்டுமே எனது பிறந்தநாள் பரிசாகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அஜித். 

பொதுவாக ரசிகர்கள் எப்போதும் தங்களைப் பற்றி பேச வேண்டும், தங்களை தூக்கி கொண்டாட வேண்டும், குறிப்பாக பிறந்தநாளில் ரசிகர்கள் நிச்சயம் தங்கள் புகழ்பாட வேண்டும், என்பதே பெரும்பாலான நடிகர்களின் விருப்பமாக இருக்கும். அப்படியான முக்கிய சமயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்து, மற்ற நடிகர்களில் இருந்து தான் எவ்வாறு வேறுபடுகிறேன் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தி இருந்தார் அஜித். அதனாலோ என்னவோ ரசிகர்களின் எண்ணிக்கை, அவருக்கு நாளுக்குநாள் இன்றும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 

தனது வாழ்வின் வாயிலாக, தனது திரைப் படங்களின் வாயிலாக ரசிகர்களுக்கு தினம்தினம் நம்பிக்கையை ஊட்டி வருபவர் தல அஜித்குமார் திரைப்படங்களின் வசனங்களின் மூலமாகவே ரசிகர்களின் மத்தியில் ஒரு புத்துணர்வை தினமும் அளித்து வருகிறார்.  முகவரி திரைப்படத்தில் வரும் வசனமே இதற்கு மிக முக்கிய சாட்சியமாக கடைசி வரைக்கும் ஜெயிக்கலனா என்ன பண்ணுவ என்று கேட்பவரிடம் அப்போதும் ஜெயிக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருப்பேன் என்பது இளைஞர்களின் வாழ்விற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. 

இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் தல அஜித் குமார் அவர்களுக்கு தண்டோரா டைம்ஸ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Thala, Thala 50, Valimai, Valimai Update, Thala Ajith, Ajithkumar, Ajith, Shalini